search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவையில் சமையல் எண்ணெய் ஆலை சீல்"

    பிரபல கம்பெனிகளின் பெயரில் போலியாக தயாரிக்கப்பட்ட கலப்பட சமையல் எண்ணெய் சிக்கியுள்ளது. இதனைத்தொடர்ந்து அதிகாரிகள் சமையல் எண்ணெய் ஆலைக்கு சீல் வைத்தனர்.

    கோவை:

    கோவையில் இருந்து திருப்பூருக்கு வேனில் கலப்பட சமையல் எண்ணெய் கொண்டு செல்லப்படுவதாக திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் பல்லடம் அருகே காரணம்பேட்டையில் அதிகாரிகள் வாகன சோதனை நடத்தினர். அவ்வழியாக வந்த வேனை நிறுத்தி சோதனை செய்த போது 4200 லிட்டர் கலப்பட எண்ணெய் பாக்கெட்டுகள் அடங்கிய பெட்டிகளை பறிமுதல் செய்தனர்.

    வேனில் இருந்த கோவை அன்னூரை சேர்ந்த குமரேசன்(35), மகேஷ்(19), சுமை தூக்கும் தொழிலாளர்கள் குருசாமி(35), வீராசாமி(28) ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அன்னூர் ராஜீவ் வீதியில் இயங்கி வரும் தனியார் சமையல் எண்ணெய் ஆலையில் இருந்து இவற்றை ஏற்றி வந்ததாக கூறினர்.

    இதுகுறித்து திருப்பூர் அலுவலர்கள் கோவை மாவட்ட உணவு பாதுகாப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் விஜயலலிதாம்பிகை மற்றும் அலுவலர்கள் அன்னூரில் உள்ள ஆலைக்கு பிற்பகலில் சென்றனர். அங்கு ஆலை மூடப்பட்டிருந்து.

    இதைத்தொடர்ந்து மேட்டுப்பாளையம் கோர்ட்டில், தேடுதல் ஆணை பெற்று வி.ஏ.ஓ. மற்றும் போலீசார் முன்னிலையில் இரவு 8 மணி அளவில் ஆலையின் பூட்டுகளை உடைத்து உள்ளே சென்று சோதனை நடத்தினர். அங்கு பிரபல நிறுவனங்களின் பெயரில் கடலை எண்ணெய், சூரிய காந்தி எண்ணெய், பாமாயில் என ஏராளமான லேபிள்கள் கிடைத்தன.

     


    கடந்த 7 ஆண்டுகளாக இந்த ஆலை செயல்பட்டு வந்துள்ளது. சமையல் எண்ணெய் தயாரிப்புக்கான அனுமதியை உணவுத்துறையிடம் பெறவில்லை. ஒரு லிட்டர் ஆயில் பாக்கெட் பெட்டி 105-ம், தீப எண்ணெய் பெட்டி, தேங்காய் எண்ணெய் டின், சமையல் எண்ணெய் டின் இருந்தது. அதில் கலப்பட சமையல் எண்ணெய் ஊற்றி விற்பனைக்கு அனுப்பி வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது.

    சமையல் எண்ணெய், தேங்காய் எண்ணெய் போன்ற சுமார் 25 ஆயிரம் லிட்டர் இருந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.25 லட்சம் ஆகும். இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் சமையல் எண்ணெய் ஆலைக்கு ‘சீல்‘ வைத்தனர். இன்று அதிகாலை 2½ மணிக்கு அதிகாரிகளின் சோதனை முடிவடைந்தது.

    ஆலையில் இருந்து சமையல் எண்ணெய் பரிசோதனைக்கு எடுக்கப்பட்டு ஆய்வுக்காக மதுரையில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 14 நாட்களில் ஆய்வு அறிக்கை கிடைத்ததும், அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். #Tamilnews

    ×